நியூயார்க்,
ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ், மணிக்கட்டு காயம் காரணமாக கடந்த 4 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நிலையில், வரவிருக்கும் 2026 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்குவதை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார்.
நியூயார்க்கில் வருகிற 30 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ள இத்தொடரில், தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் அல்காரஸ் களமிறங்குகிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் “ஆரம்பிக்கலாம்!” என பதிவிட்டு அவர் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் தொடரின்போது அல்காரஸுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், டொராண்டோ மற்றும் சின்சினாட்டி ஓபன் உள்ளிட்ட முக்கியமான தொடர்களில் அவர் பங்கேற்க முடியவில்லை.
நீண்ட நாட்களாக போட்டிகளில் விளையாடாத போதிலும், அல்காரஸ் உலக தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.
7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அல்காரஸ், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தி தனது 2-வது அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் தனது 19-வது வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், உலகின் மிக இளம் வயதில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
தற்போது 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அவர், தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.