டென்னிஸ்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மரியா , அலெக்சாண்ட்ரா ஈலா

அலெக்சாண்ட்ரா ஈலா, டெரெசா வாலண்டோவாவை எதிர்கொண்டார்.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

போராடி வென்ற மரியா சக்காரி

2-வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் மாயா ஜாயிண்ட் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சக்காரி, அடுத்த இரண்டு செட்களிலும் சிறப்பாக விளையாடி 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

டைபிரேக்கரில் அசத்திய ஈலா

மற்றொரு ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா, செக் குடியரசின் டெரெசா வாலண்டோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈலா 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT