டோக்கியோ,
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், கனடா வீராங்கனை லைலா பெர்னாண்டஸ் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் லைலா பெர்னாண்டஸ், உஸ்பெகிஸ்தானின் கமிலா ரஹிமோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெர்னாண்டஸ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ரஹிமோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் ஓபன் தொடரில் பட்டம் வென்ற பெர்னாண்டஸ், அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற நிங்போ ஓபன் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அங்கு கஜகஸ்தானின் எலினா ரைபாகினாவிடம் தோல்வியடைந்தார்.
தற்போது டோக்கியோ தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர், ஸ்லோவாக்கியாவின் 18 வயது இளம் வீராங்கனை மியா பொஹான்கோவாவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் இருவரும் கடுமையாகப் போராடிய நிலையில், ஷ்னைடர் 6-4, 7-6 (7) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
டோக்கியோவில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இருவரும் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.