ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அன்னா கலின்ஸ்கயாவை (ரஷியா) தோற்கடித்து 5-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் சோரானா சிர்ஸ்டியா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் லின்டா நோஸ்கோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இன்னொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சரிவில் இருந்து மீண்டு 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிச்சை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அலிஜான்ட்ரோ டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய இத்தாலி வீரர் ஆந்த்ரே பெல்லெக்ரினோ 7-6 (10-8), 6-1 என்ற நேர்செட்டில் 22-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாபோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தனர்.