சென்னை,
சென்னையில் நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ. 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மாக்டா லினெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் தொடர் நடைபெற்று வந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த இறுதிப்போட்டியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியெனும், 3-வது இடத்தில் இருந்த மாக்டா லினெட்டும் மோத இருந்தனர்.
ஆனால், நேற்று பெய்த மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தீபாவளி பட்டாசுப் புகையால் மைதானத்தைச் சுற்றிலும் காற்று மாசு அதிகரித்து, பார்வைத் தெளிவும் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதிப்போட்டி இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய ஜானிஸ் டியென், 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஆட்டத்தில் அதிரடியாக திரும்பிய மாக்டா லினெட், 2-வது செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிஸ் டியெனை வீழ்த்தி மாக்டா லினெட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் தனது டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பட்டங்களின் எண்ணிக்கையை 4-ஆக உயர்த்தியுள்ளார் லினெட். மேலும், 2024-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் வெல்லும் முதல் டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுவாகும்.