டோக்கியோ,
4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாக்கா, தனது 3 வயது மகள் விரும்பினால் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனை ஒசாக்காவின் இந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகள் ஷாய் பிறந்த பிறகு சுமார் 15 மாதங்கள் டென்னிஸிலிருந்து விலகியிருந்த ஒசாக்கா, தற்போது மீண்டும் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த வாரம் டோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் தொடரில் பங்கேற்கவும் அவர் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், தனது எதிர்காலம் குறித்து பேசிய ஒசாக்கா, தாயான பிறகு தனது முன்னுரிமைகள் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவேன் என்று சில நேரங்களில் யோசிப்பேன். எனது மகள், நான் அதிகமாக பயணம் செய்வதை விரும்பவில்லை என்று கூறினால், அதை நான் புறக்கணிக்க மாட்டேன். என் மகள்தான் எனக்கு முதல் முன்னுரிமை. டென்னிஸுக்காக என்னால் முடிந்த அளவுக்கு உழைக்கிறேன். ஆனால், எனது முழு நேரத்தையும் விளையாட்டுக்காக மட்டுமே செலவிட முடியாது” என்றார்.
தற்போது உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள 29 வயதான ஒசாக்கா, டோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் தொடரில் 7-ஆம் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார். முதல் சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியை எதிர்கொள்கிறார்.