லண்டன்,
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பதை ரோஹன் போபண்ணா கணித்துள்ளார்.
லண்டனில் தொடங்க உள்ள 2026 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய வீரர்கள் குறித்து தனது கணிப்பை பகிர்ந்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர் 1 வீரருமான ஜானிக் சின்னர் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவார் என்று ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், எலினா ரைபகினா சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்று போபண்ணா கணித்துள்ளார்.
கார்லோஸ் அல்காரஸ், லோரென்சோ முசெட்டி, ஹோல்கர் ரூனே மற்றும் வாலண்டின் வாசெரோட் ஆகியோர் இந்த ஆண்டு விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை.
கடந்த 6 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 6 வெவ்வேறு வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், இந்த முறை மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள போராடுவார்.
23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ், 4 ஆண்டுகளுக்குப் பிறகு வைல்ட்கார்டு வாயிலாக விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் மீண்டும் களமிறங்க உள்ளார். அவரது வருகை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.