டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ஸ்வெரேவுடன் மோதுகிறார் ஜானிக் சினெர்

நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தார்.

லண்டன்,

"கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 114-ம் நிலை வீரரான ஆர்தர் பெர்ரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

2 மணி 14 நிமிடம் அரங்கேறிய ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆர்தர் பெர்ரியை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இறுதி போட்டி

மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 7 முறை சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஜானிக் சினெர் மோதுகின்றனர்.

பெண்கள் பிரிவு

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனைகளான கரோலினா முச்சோவா-லிண்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.46 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.23 கோடி கிடைக்கும்.