டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரைஇறுதி போட்டியில் பென் ஷெல்டன் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரசுடன் மோதுகிறார்.
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. வீரர்கள் ஜான் மெக்கன்ரோ, இவான் லென்டில் என இரு பிரிவாக பிரிக்கப் பட்டு மோதுகின்றனர்.
ஜான்மெக்கன்ரோ பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் பிரான்சை சேர்ந்த ஆர்துர் பில்சை வீழ்த்தி 'ஹாட் ரிக்' வெற்றியை ருசித்தார். லீக் சுற்று முடிவில் இந்த பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர். ஆர்துர் பில்ஸ் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், ஸ்பெ யின் வீரர் ரபெல் ஜோடர் (3 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தனர். பென் ஷெல்டன் அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரசுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.
இவான் லென்டில் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட முன்னாள் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர்செட்டில் பிளாவியோ கோபோலியை (இத்தாலி) தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தார். 3-வது தோல்வியை சந்தித்த பிளாவியோ கோபோலி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். டேனில் மெட்விடேவ் (ரஷியா)-பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா) இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் இந்த பிரிவில் இருந்து 2-வது வீரராக அரைஇறுதிக்குள் நுழைவார்.