பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் நாட்டின் ஜெய்மி பரியா மற்றும் அமெரிக்காவின் பிரான்சிஸ் டையபோ விளையாடினர்.
இருவரும் கடுமையாக விளையாடி தலா 2 செட்டுகளை கைப்பற்றினர். இதனால், போட்டியில் வெற்றி பெற வேண்டிய 5-வது செட்டை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். அப்போது, வீரர்கள் இருவருக்கு இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
இரண்டு பேரும் 5-வது செட்டுக்கான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வலை பகுதியில் சந்தித்து கொண்டனர். அப்போது பரியாவை நோக்கி டையபோ கூறும்போது, ரொம்ப கடினம் வாய்ந்த வீரர் போன்று நடந்து கொள்ள வேண்டாம். நீங்கள் ஒன்றும் வீழ்த்த முடியாதவர் இல்லை சகோதரா. விளையாடுங்கள் என்ற வகையில் பேசினார்.
இதனை அருகேயிருந்த போட்டி நடுவரிடம் பரியா முறையிட்டார். அவர் என்ன பேசினார் என கவனித்தீர்களா? என கூறினார். இருவரையும் அமைதியாக இருக்கும்படி நடுவர் கூறினார். அப்போது டையபோ, எனக்கு வெற்றி அவசியம். எனக்கு ஒன்றும் பதற்றம் இல்லை.
ஆனால், பரியா கிண்டல் செய்தபடியும், வாயாடித்தனம் செய்து கொண்டும் இருக்கிறார். அவர் என்னவோ, அவரை ரியான் கார்சியா (குத்துச்சண்டை வீரர்) அல்லது வேறு பெரிய வீரர் என நினைத்து கொண்டிருக்கிறார் என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்பின்னர், போட்டி முடிவில் பரியாவை 4-6, 6-7 (2), 7-6 (4), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் டையபோ வீழ்த்தினார். அடுத்து மேத்யூ அர்னால்டியை எதிர்த்து டையபோ விளையாட உள்ளார்.