நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் சபலென்கா - பெகுலா மீண்டும் மோதுகின்றனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் நட்சத்திர வீராங்கனை அரினா சபலென்கா, 2026 விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-6 (1), 3-6, 7-6 (7) என்ற செட் கணக்கில் லிண்டா நோஸ்கோவாவை போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெஸிகா பெகுலா மற்றும் எம்மா நவாரோ மோதினர். இதில் பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா - பெகுலா நேருக்கு நேர் மோத உள்ளனர். அமெரிக்க ஓபன் தொடரில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக 3-வது முறையாக மோத உள்ளனர்.
2024-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பெகுலாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல், 2025-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் அரையிறுதியில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா, பின்னர் பட்டத்தையும் கைப்பற்றினார்.
இதனால் அமெரிக்க ஓபன் அரையிறுதியில் மீண்டும் சந்திக்கும் இருவருக்கும் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.