நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரைபகினா, காப், ஆண்ட்ரீவா காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த சீனாவின் செங் சின்வென், 2022-ம் ஆண்டு சாம்பியனும் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். விருவிருப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக்கை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி செங் சின்வென் காலிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் தங்க பதக்கத்துக்கான போட்டியிலும் செங், ஸ்வியாடெக்கை வீழ்த்தியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2021-ம் ஆண்டு எம்மா ராடுகானுவுக்குப் பிறகு, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியை எட்டிய முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற பெருமையை செங் பெற்றுள்ளார்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ஜப்பானின் நஜோமி ஒசாக்காவை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ரைபகினா, செங் சின்வெனை எதிர்கொள்கிறார்.
மேலும், இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரைபகினா, உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். செங்கை காலிறுதியில் வீழ்த்தினால், தற்போதைய நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிக்க முடியும்.
மேலும், அமெரிக்காவின் கோகோ காப், தனது சக நாட்டு வீராங்கனையான ஈவா ஜோவிச்சை 6-1, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
3-வது சுற்றில் தனது நெருங்கிய தோழியான அலெக்ஸ் இயலாவை சுமார் 3 மணி நேரம் போராடி வீழ்த்திய ஜோவிச், முதல்முறையாக அமெரிக்க ஓபனின் 4-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஆனால் அடுத்த சுற்றில் காபிடம் தோல்வியடைந்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 3-வது முறையாக காப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் மீரா ஆண்ட்ரீவா, அனஸ்தாசியா பொடாபோவாவை 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் ஆண்ட்ரீவா முதல்முறையாக அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அவர் கோகோ காபை எதிர்கொள்கிறார்.