டென்னிஸ்

யார் இந்த மாயா? - சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை தகர்த்த 17 வயது தமிழ் பெண்

ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதுடன், இரட்டையர் பிரிவிலும் மாயா கோப்பையை வென்றார்.

லாகோஸ்,

போர்ச்சுகலில் நடைபெற்ற டபிள்யூ 35 லாகோஸ் டென்னிஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி இரட்டை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதன் மூலம், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் அபார வெற்றி!

மகளிருக்கான டபிள்யூ 35 லாகோஸ் டென்னிஸ் தொடர் போர்ச்சுகல் நாட்டின் லாகோஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஸ்பெயின் வீராங்கனை செலியா செர்வினோ ரூயிஸை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மாயா, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சானியா மிர்சாவின் சாதனை முறியடிப்பு!

இந்த வெற்றியின் மூலம் 17 வயது 3 மாதங்களிலேயே தொழில்முறை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மாயா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 17 வயது 10 மாதங்களில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது மாயா அந்த சாதனையை முறியடித்து இந்திய டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இரட்டையர் பிரிவிலும் சாம்பியன்!

ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதுடன், இரட்டையர் பிரிவிலும் மாயா கோப்பையை வென்றார். உக்ரைன் வீராங்கனை யெலிசவெட்டா கோட்லியாருடன் இணைந்து விளையாடிய அவர், இறுதிப்போட்டியில் சீனாவின் மின் லியு, இத்தாலியின் கார்லோட்டா மோசியா ஜோடியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த மாயா ஜோடி, பின்னர் சிறப்பாக விளையாடி 0–6, 6–2, 10–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரட்டையர் பட்டத்தையும் கைப்பற்றியது.

கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை!

மாயா ராஜேஷ்வரன் ரேவதி, கோவை மாவட்டம் காளப்பட்டி நேரு நகரைச் சேர்ந்தவர். 17 வயதிலேயே சர்வதேச டென்னிஸ் தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மாயா, இந்திய டென்னிஸ் எதிர்காலத்தின் நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT