இண்டியன்வெல்ஸ்,
உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகிறார்கள். இதில் 3-வது நாளில் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் (குரூப்) தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2, 7-5 என்ற நேர்செட்டில் மாற்று ஆட்டக் காரராக வந்த மார்த்தா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார். ஜெசிகா முதல் ஆட்டத்தில் கோகோ காப்பிடம் தோற்று இருந்தார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய கோஸ்ட்யுக் அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், தரவ ரிசையில் 8-வது இடம் வகிப்பவருமான செக்குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் முன்னாள் சாம்பியன் கோகோ காப்பை (அமெரிக்கா) சாய்த்து 2-வது வெற்றியை பெற்றதுடன் முதல் வீராங்கனையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடிய கோகோ காப்புக்கு இது முதல் தோல்வியாகும். கோகோ காப் தனது கடைசி லீக்கில் ஜெசிகா பெகுலாவுடன் மோதுகிறார். இதில் வெற்றி காண்பவர், இந்த பிரிவில் இருந்து 2-வது வீராங்கனையாக அரைஇறுதியை எட்டுவார்.