டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீராங்கனை ஆன்ட்ரீவா “சாம்பியன்”

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார்.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷிய வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.32 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இண்டியன்வெல்ஸ்,

உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்தது.

ஆன்ட்ரீவா சாம்பியன்

இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஒற்றையர் இறுதி சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ரஷிய வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா, 32 வயதான உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார்.

1 மணி 48 நிமிடம் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மிரா ஆன்ட்ரீவா 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்விடோலினாவை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். கடந்த 22 வருடங்களில் இந்த பட்டத்தை கைப்பற்றிய இளம் வீராங்கனை என்ற பெருமையையும் 19 வயதான ஆன்ட்ரீவா பெற்றார்.

ரூ.32 கோடி பரிசு

ஒரு செட்டை கூட இழக்காமல் கோப்பையை உச்சி முகர்ந்த 11-வது வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா ரூ.32 கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் அவருக்கு பென்ஸ் காரும் பரிசாக வழங்கப்பட்டது. தோல்வி கண்ட ஸ்விடோலினாவுக்கு ரூ.14 கோடி கிட்டியது. போட்டியின் போது உக்ரைனை சேர்ந்த ஸ்விடோலினா, மிரா ஆன்ட்ரீவாவுடன் கைகுலுக்கவும். இணைந்து போட்டோ எடுக்கவும் மறுத்து விட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆன்ட்ரீவா உலக தரவரிசையில் ஒரு இடம் உயர்ந்து தனது சிறந்த தரநிலையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். எலினா ரைபகினா (கஜகஸ்தான் 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார். அரினா சபலென்கா (பெலாரஸ்) 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தார்.

சினியகோவா- டவுன்சென்ட் சாம்பியன்

இரட்டையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கேத்ரினா சினியகோவா (செக்குடியசு)-டெய்லர் டவுன்சென்ட் (அமெரிக்கா) இணை 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் சாரா எர் ரானி- ஜாஸ்மின் பாவ்லினி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. சினி யகோவா - டவுன்சென்ட் கூட்டணி இந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் உள்பட 6 பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ரூ.6% கோடி பரிசாக வழங்கப்பட்டது.

அல்காரஸ் வெற்றி

இதே போல் முன்னணி 8 வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. வீரர்கள் ஜான் மெக்கன்ரோ, இவான் லென்டில் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர்.

2-வது நாளான நேற்று இவான் லென்டில் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) பதம்பார்த்து வெற்றியுடன் தொடங்கினார்.

முன்னதாக ஜான் மெக்கன்ரோ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆர்துர் பில்சை (பிரான்ஸ்) வென்றார்.

SCROLL FOR NEXT