டென்னிஸ்

அமெரிக்க ஓபன் - மைதானத்துக்குள் கஞ்சா வாசனை?... ஆட்டத்தை நிறுத்தி புகார் அளித்த உலகின் நம்பர் 1 வீராங்கனை

சபலென்கா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் இருந்து திடீரென கஞ்சா புகைக்கும் வாசனை வீசியதால், உலகின் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா ஆட்டத்தை நிறுத்தி நடுவரிடம் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வீஸ் செய்ய முடியாமல் தவிப்பு

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டில் சபலென்கா 2-0 என முன்னிலையில் இருந்தபோது, மைதானத்தில் திடீரென கஞ்சா வாசனை வீசியதாக தெரிகிறது. இதனால் சர்வீஸ் செய்ய முடியாமல் சிரமப்பட்ட சபலென்கா உடனடியாக ஆட்டத்தை நிறுத்தினார்.

பின்னர் நடுவரிடம் சென்று, மைதானத்திற்குள் யாரோ கஞ்சா புகைப்பதாகவும், அதன் வாசனை மிகவும் கடுமையாக இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

மைதானத்திற்குள் கஞ்சா

நியூயார்க் மாகாணத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக இருந்தாலும், அமெரிக்க ஓபன் நடைபெறும் மைதான வளாகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட எந்தவொரு புகைப் பொருளையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சபலென்கா வெற்றி

இந்த எதிர்பாராத சம்பவம் சபலென்காவின் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார்.

இதன் மூலம் கமிலா ரகிமோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் சபலென்கா, அமெரிக்க வீராங்கனை டைலர் டவுன்செண்டை எதிர்கொள்ள உள்ளார்.

SCROLL FOR NEXT