ஆன்மிகம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

26ஆம் தேதி தாரகாசுர சம்ஹாரமும், 27ஆம் தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.

பின்னர் மாலை 6 மணியளவில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

SCROLL FOR NEXT