தொழில்நுட்பம்

மளிகைக் கடைகளுக்கு உதவும் ஏ.ஐ: எப்படி இயங்கும் தெரியுமா?

ஆன்லைனில் விலை குறைவாக இருந்தால், கடையில் வாங்காமல் இணையதளத்திலேயே வாங்கிவிடுகின்றனர்.

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வளர்ச்சியால் சிறிய மளிகைக் கடைகளுக்கு போட்டி அதிகரித்துள்ளது. ஒரு பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், கடையில் அதன் விலையை கேட்டுவிட்டு, உடனே செல்போனில் அதே பொருளின் விலையை இணையதளங்களில் தேடிப் பார்க்கின்றனர். ஆன்லைனில் விலை குறைவாக இருந்தால், கடையில் வாங்காமல் இணையதளத்திலேயே வாங்கிவிடுகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வதுடன், பொருட்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பதும் மளிகைக் கடைக்காரர்களுக்கு சவாலாகி வருகிறது. இந்த பிரச்சினைக்கு உதவும் வகையில், ஆன்லைன் விலையை கண்காணித்து கடைக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கும் செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த ஏஐ ஏஜெண்டுகள் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையதளங்களில் பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்கின்றன.

ஒரு பொருளின் விலை ஆன்லைனில் குறைந்தால், அந்த தகவலை மளிகைக் கடைக்காரருக்கு தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஆன்லைன் விலைக்கு ஏற்ப தங்கள் கடையிலும் விலையை மாற்ற வேண்டுமா என்பதை கடைக்காரர் முடிவு செய்ய முடியும்.மேலும், கடையில் எந்த பொருட்கள் வேகமாக விற்பனையாகின்றன, எந்த பொருட்கள் நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் உள்ளன என்பதையும் இந்த ஏஐ ஏஜெண்டுகள் கண்டறிகின்றன. ஒரு பொருளை கடைக்காரர் எவ்வளவு விலைக்கு வாங்கினார், தற்போது சந்தையில் அதன் விலை என்ன, இணையதளங்களில் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது, கடையில் எவ்வளவு இருப்பு உள்ளது ஆகிய விவரங்களை கணக்கிட்டு, அந்த பொருளுக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றன. பெரிய கடைகளில் இதுபோன்ற விலை கண்காணிப்பு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெங்களூருவில் உள்ள சிறிய மளிகைக் கடைகளும் இதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 'சாட்ஜிபிடி டாட்ஸ்', 'கிளாட்', 'குரோக்' போன்ற ஏஐ கருவிகளையும் இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்த முடியும். 'பைண்ட்', 'ஜினிசிஸ்', 'இன்கிரெஃப்' உள்ளிட்ட நிறுவனங்களும் சில்லறை வணிகத்துக்கான ஏஐ கருவிகளை வழங்குகின்றன.

SCROLL FOR NEXT