ஐபோன் டியோ 
Technology

ஐபோன் டியோ எப்படி இருக்கு..? 3 லட்சம் ரூபாய்க்கு தகுதியானதா?

டிஸ்பிளேவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மென்மையாக இருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விற்பனைக்கு வரவுள்ள ஐபோன் டியோ குறித்த மதிப்பாய்வுகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

மடிக்கக்கூடிய ஐபோன்

ஆப்பிள் நிறுவனம், மடிக்கக்கூடிய முதல் ஐபோன் மாடலான ஐபோன் டியோவை (iPhone Duo) கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஐபோன், இந்தியாவில் நாளை விற்பனைக்கு வருகிறது. ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் கடந்த 16-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மடிக்கக்கூடிய வடிவமைப்பு, இரண்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் சமீபத்திய A20 ப்ரோ சிப்செட் ஆகிய வசதிகளைக் கொண்ட இந்த ஐபோனை வாங்குபவர்களுக்கு பல சேமிப்பு விருப்பங்கள் மற்றும் அறிமுகச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த விலையில் காரே வாங்கலாம்

ஆனால் விலைதான் மிக அதிகம். இந்த போனை வாங்கும் விலையில் ஒரு காரே வாங்கிவிடலாம். இந்தியாவில், இந்த ஐபோனின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். இந்த விலையானது 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனுக்கானது. இதேபோல் 512GB மெமரி மாடலின் விலை ரூ. 3,24,900 ஆகும். 1TB மற்றும் 2TB மாடல்களின் விலைகள் முறையே ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய போன், 'ஸ்டார் ஒயிட்' (Star White) மற்றும் 'நைட் ஸ்கை' (Night Sky) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விற்பனைக்கு வர உள்ள இந்த ஐபோன் குறித்த மதிப்பாய்வுகள் வெளியாகத் தொடங்கி உள்ளன. அதில் சில மதிப்பாய்வுகள், ஐபோனின் தனிச்சிறப்பு அம்சமான மடிக்கக்கூடிய டிஸ்பிளேவின் நிலைத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பி உள்ளன. டிஸ்பிளேவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மென்மையாக உள்ளது, அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

வெய்போ பயனரின் கருத்து

அந்த போனை சிறிது நேரம் பயன்படுத்திய வெய்போ பயனர் காங், டிஸ்பிளே குறித்த தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதை, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ், எகஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், இரட்டை திரை கொண்ட ஆப்பிள் டியோ ஐபோனின் மடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ள திரை தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருப்பதைக் காட்டுகிறது. விரலால் டிள்பிளேவை அழுத்தும்போது, ​​அந்த மேற்பரப்பில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் காண முடிகிறது.

மாறுபடும் தடிமன் கொண்ட மிக மெல்லிய டிஸ்பிளே அமைப்பாக இது இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். அதாவது, மைய மடிப்புப் பகுதி மெல்லியதாகவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தடிமனாகவும் இருக்கும். ஆப்பிள் ஏன் இவ்வாறு வடிவமைக்க வேண்டும்? மடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அழுத்தத்தை சிறப்பாக கையாள்வதற்காக இருக்கலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

ரூ.3 லட்சத்திற்கு தகுதியானதா?

இதேபோல் ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்ட நேரடி ஆய்வு முடிவும் கவனம் பெற்றுள்ளது. ஒரு பிரீமியம் கட்டமைப்பு, துடிப்பான டிள்பிளேக்கள், சீரான செயல்திறன் மற்றும் வலுவான பேட்டரி ஆயுள் ஆகியவற்றை ஐபோன் டியோ கொண்டிருக்கும் என தெரிவித்தது. அதேசமயம், இந்த ஐபோன், அதன் ஆரம்ப விலையான ரூ.2,99,900-க்கு (சுமார் ரூ. 3 லட்சம்) தகுதியானதாக இருக்குமா? என்ற கேள்வியையும் வாடிக்கையாளர்களிடம் வைத்துள்ளது.

‘இந்த போனில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதாவது, மடிக்கக்கூடிய டிள்பிளே வடிவத்திற்கு ஈடுகொடுக்காத மூன்றாம் தரப்பு செயலிகள், இன்னும் முழுமையடையாததாகத் தோன்றும் மல்டிடாஸ்கிங், மற்றும் பெரும்பாலான லேப்டாப்களை விட அதிக விலை கொண்ட ஒரு இந்த சாதனத்தில் பிரத்யேக டெலிஃபோட்டோ கேமரா இல்லாதது போன்றவை அந்தச் சிக்கல்களாகும்” என ஆங்கில இதழ் மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT