சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தச் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடிக்கும் அதிகமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம், தற்போது ஸ்டோரி பதிவுகளுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதுடன், 24 மணி நேரம் மட்டுமே காணக்கூடிய ஸ்டோரி வசதியையும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை ஸ்டோரியைப் பதிவிட்ட பிறகு அதில் ஏதேனும் தவறு இருந்தால், அதை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஏற்கனவே கிடைத்த பார்வைகள் மற்றும் பிற எதிர்வினைகளை இழக்க நேரிடும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்டோரியைப் பதிவிட்ட 15 நிமிடங்களுக்குள் அதைத் திருத்திக்கொள்ளும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய வசதியின் மூலம் ஸ்டோரியில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் (Text), இசை (Music), ஸ்டிக்கர்கள் (Stickers), வரைபடங்கள் (Drawings) ஆகியவற்றை மாற்றிக்கொள்ளலாம். மேலும், ஏற்கனவே கிடைத்த பார்வைகள், விருப்பங்கள் மற்றும் பதில்களை இழக்காமல் திருத்தங்களைச் சேமிக்க முடியும். ஆனால், பதிவேற்றிய புகைப்படம் அல்லது வீடியோவை மாற்ற முடியாது.
பயனர்கள் தங்களது பதிவிடப்பட்ட ஸ்டோரியைத் திறந்து, அதில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் 'Edit Story' என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து தேவையான மாற்றங்களைச் செய்து சேமிக்கலாம். திருத்தப்பட்ட ஸ்டோரியில் 'Edited' என்ற குறியீடு இடம்பெறும். ஸ்டோரியைப் பதிவிட்ட 15 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இந்தப் புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.