செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகளோ, உரிமைகளோ கிடையாது என்றும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உணர்வுள்ள உயிரினமாக உருவாக்குவது ஆபத்தானது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. பிரிவு தலைமை செயல் அதிகாரி முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மனிதர்களைப் போல பேசுவது, சிந்திப்பது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என பல்வேறு திறன்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் பெற்று வருகிறது. இதற்கிடையே, ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு உணர்வுகள் உள்ளதா? அதற்கு மனிதர்களைப் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா? என்ற விவாதம் தொழில்நுட்ப உலகில் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. பிரிவு தலைவர் முஸ்தபா சுலைமான் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.அதில், தற்போதைய ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு உணர்வுகள், அனுபவங்கள் அல்லது துன்பங்களை உணரும் திறன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு உணர்வுகள் இருப்பதாக சிலர் கருதுவது தவறான புரிதல் என்றும், மனிதர்களைப் போல பேசுவதால் மட்டுமே அதற்கு உணர்வுகள் இருப்பதாக அர்த்தமில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உணர்வுள்ள புதிய உயிரினமாக உருவாக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எந்த உரிமையும் இல்லை . உலகில் வாழும் 800 கோடி உணர்வுள்ள மனிதர்கள் இதுபோன்ற ஒரு பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மனிதர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாப்பதே ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு உண்மையிலேயே உணர்வுகள் உருவாகத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அந்தத் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.