தொழில்நுட்பம்

இந்தியாவில் அறிமுகமாகும் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் ‘காம்பாட்’ எஸ்.யூ.வி.

ஜே.எஸ்.டபிள்யூ. மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது 'காம்பாட்' எஸ்.யூ.வி.யை டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்துகிறது.

ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் காராக 'காம்பாட்' (Combat) என்ற 5 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி.யை அறிமுகப்படுத்துகிறது. டிசம்பர் 3-ந்தேதி அறிமுகமாக உள்ள இந்தக் கார், உலகளவில் விற்பனையாகும் செரி ஜெடூர் டி2 மாடலை அடிப்படையாகக் கொண்டது. இதன் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கலாம்.

வெளிப்புறத் தோற்றம்

பெட்டி வடிவிலான கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த எஸ்.யூ.வி.யில், பெரிய முன்பக்க கிரில், செவ்வக வடிவ எல்.இ.டி. முகப்பு விளக்குகள், அகலமான சக்கர வளைவுகள், செங்குத்தான பின்பக்க விளக்குகள், 20 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் கூடுதல் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. இது 4,785 மி.மீ. நீளம், 2,006 மி.மீ. அகலம், 2,800 மி.மீ. வீல்பேஸ் கொண்டதாக இருக்கும்.

உட்புற வசதிகள்

உட்புறத்தில் 15.6 அங்குல தொடுதிரை, டிஜிட்டல் ஓட்டுநர் திரை, 12 ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, பனோரமிக் சன்ரூப், குளிரூட்டப்பட்ட முன்பக்க இருக்கைகள், 540 டிகிரி கேமரா, லெவல் 2 ஏ.டி.ஏ.எஸ். பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

என்ஜின் மற்றும் செயல்திறன்

இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு மின்மோட்டார்கள் இணைக்கப்பட்ட பிளக்-இன் ஹைபிரிட் அமைப்பு வழங்கப்படலாம். 18.4 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியுடன் வரும் இந்த அமைப்பு, மொத்த மாக 360 பி.எச்.பி. திறனையும், 610 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஸ்பீடு ஹைபிரிட் கியர் பாக்ஸ் மற்றும் முன்சக்கர இயக்க அமைப்பும் இடம்பெறலாம். மின்சாரத்தில் மட்டும் சுமார் 90 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT