வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியிலும் நேரத்திலும் தானாகவே மெசேஜ் செல்லும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்ப முடியும். மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இந்த வசதியை உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. தனிநபர் உரையாடல்கள் மட்டுமின்றி, குரூப் சாட்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
வாட்ஸ் அப்பில் வழக்கமான மெசேஜ் அனுப்புவது போலவே டைப் செய்துவிட்டு, மெசேஜ் அனுப்பும் பட்டனை அழுத்தாமல், அதை சில நொடிகள் அழுத்திப் பிடிக்க வேண்டும்.அப்போது தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்வதற்கான வசதி தோன்றும்.எந்த தேதியில், எந்த நேரத்தில் மெசேஜ் செல்ல வேண்டுமோ அதைத் தேர்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.இதன் மூலம் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் பிறகும், அதிகபட்சம் 14 நாட்கள் வரையிலும் மெசேஜ் அனுப்புவதற்கான நேரத்தை முன்கூட்டியே திட்டமிடலாம்.
இந்த வசதியின் முக்கிய அம்சம் என்னவென்றால், மெசேஜ் அனுப்புவதற்காகத் தேர்வு செய்த நேரத்தில் உங்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது பேட்டரி தீர்ந்து போயிருந்தாலும் திட்டமிட்டபடி மெசேஜ் சென்றுவிடும்.மேலும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மெசேஜ்களைப் பயனர்கள் பார்க்கவும், அவற்றை அனுப்புவதற்கு முன்பாக நீக்கவும் முடியும்.இந்த மெசேஜ்களுக்கும் வழக்கமான வாட்ஸ்அப் உரையாடல்களைப் போலவே எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே மெசேஜ்களைப் படிக்க முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகள், தேர்வு வாழ்த்துகள், முக்கியமான நினைவூட்டல்கள் மற்றும் அலுவலகத் தகவல்களை உரிய நேரத்தில் அனுப்ப இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு இது மகிழ்சியை கொடுத்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அடுத்த சில வாரங்களில் படிப்படியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.