Technology

வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி! இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிடலாம்

குறுஞ்செய்திகள் மட்டுமின்றி இணையதள இணைப்புகள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தானாக அனுப்பும்படி அமைக்கலாம்.

பிறந்தநாள் வாழ்த்துகளைச் சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும், முக்கியமான கூட்டம் குறித்து நண்பர்களுக்கு நினைவூட்ட வேண்டும்... இதற்காக இனி குறிப்பிட்ட நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

குறுஞ்செய்திகளைத் திட்டமிட்டு அனுப்பலாம்

வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதி சோதனையில் உள்ளது. இதன் மூலம் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி இணையதள இணைப்புகள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தானாக அனுப்பும்படி அமைக்கலாம். ஒருமுறை திட்டமிட்டுவிட்டால், அந்த நேரத்தில் மொபைலில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் செயலி மூடப்பட்டிருந்தாலும் செய்தி தானாகச் சென்றுவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி, நேரத்தைத் தேர்வு செய்வது எப்படி?

இந்த வசதியைப் பயன்படுத்த, முதலில் அனுப்ப வேண்டிய செய்தியைத் தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்தால், தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்வதற்கான வசதி தோன்றும். தற்போதைய நேரத்திலிருந்து குறைந்தது 10 நிமிடங்கள் கழித்தும், அதிகபட்சம் 2 வாரங்கள் வரையிலும் செய்தியை அனுப்பத் திட்டமிடலாம். புகைப்படம் அல்லது காணொளியை அனுப்பும்போதும் இதே முறையைப் பயன்படுத்தலாம். ஆனால், ஒரே திட்டமிடப்பட்ட செய்தியில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு காணொளியை மட்டுமே சேர்க்க முடியும். திட்டமிடப்பட்ட செய்திகளை நிர்வகிக்க, உரையாடல் விவரப் பகுதியில் தனிப் பிரிவு இடம்பெறவுள்ளது. அதில் அனுப்ப வேண்டிய செய்திகளைப் பார்த்து, தேவையெனில் மாற்றலாம் அல்லது அனுப்புவதற்கு முன்பே நீக்கலாம். நீக்கப்பட்ட செய்தி குறித்து பெறுபவருக்கு எந்த அறிவிப்பும் செல்லாது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்?

குழு உரையாடல்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், செய்தியைத் திட்டமிட்ட நேரத்தில் குழுவில் உறுப்பினராக இருந்தவர்களுக்கு மட்டுமே அந்தச் செய்தி சென்றடையும். அதன்பிறகு குழுவில் இணைபவர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காது. தற்போது இந்த வசதி, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு சோதனைப் பதிப்பில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுக்கு எப்போது அறிமுகமாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT