தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் புதிய வசதி... ஒரே நேரத்தில் முன், பின் கேமராக்களில் படம் எடுக்கலாம்!

வாட்ஸ்அப்பின் புதிய வசதி மூலம் இரண்டு கேமராக்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

ஒரே நேரத்தில் செல்போனின் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒரே நேரத்தில் செல்போனின் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்

பொதுவாக செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது முன்பக்க அல்லது பின்பக்க கேமரா என ஏதேனும் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும். ஆனால், வாட்ஸ்அப்பின் புதிய வசதி மூலம் இரண்டு கேமராக்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடியும். இதன் மூலம் பின்பக்கக் கேமராவில் நம்மைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பதிவு செய்யும்போதே, முன்பக்கக் கேமரா வழியாக நம்முடைய முகத்தையும் பதிவு செய்யலாம். குறிப்பாக, பயணங்களின்போது அல்லது ஏதேனும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

கேமரா காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்

இந்த வசதியில் முன்பக்கக் கேமராவில் பதிவாகும் காட்சி, திரையில் சிறிய பெட்டிக்குள் தோன்றும். அந்தப் பெட்டியை விரும்பிய இடத்துக்கு நகர்த்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கேமராக்களின் காட்சிகளையும் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். இவ்வாறு இரண்டு கேமராக்களிலும் பதிவாகும் காட்சிகளை ஒரே புகைப்படம் அல்லது வீடியோவாகச் சேமிக்க முடியும். பின்னர் அவற்றை தனிப்பட்ட உரையாடல்கள், குழுக்கள், சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம்

இந்தப் புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta) பயனர்களுக்கு மட்டும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. சோதனைக் கட்டம் முடிந்த பிறகு மற்ற பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT