தொழில்நுட்பம்

இனி கார்டு விவரங்கள் தேவையில்லை: 'சாட்ஜிபிடி வாலட்' அறிமுகம் செய்தது ஓபன் ஏஐ

'சாட்ஜிபிட் வாலட் என்ற புதிய வசதியை ஓபன் ஏ.ஐ. அறிமுகம் செய்துள்ளது.

கணினி தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓபன் ஏ.ஐ., தனது சாட்ஜிபிட் தளத்தில் புதிய கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஏஐ ஏஜெண்ட்களே பயனர்களுக்காக ஆன்லைனில் பொருட்களைத் தேடுவதுடன், அவர்களின் அனுமதியுடன் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும் முடியும். இதற்காக 'சாட்ஜிபிட் வாலட் என்ற புதிய வசதியை ஓபன் ஏ.ஐ. அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது வங்கி அட்டைகளை ஒருமுறை இணைத்துவிட்டால், ஒவ்வொரு முறையும் அட்டை விவரங்களை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.

எப்படி செயல்படும்?

இந்த வசதியில் பயனர்கள் தங்களது பொருட்கள் வாங்கும் தேவையை சாட்ஜிபிடியிடம் தெரிவிக்கலாம். உதாரணமாக, குறிப்பிட்ட விலைக்குள் ஒரு பொருளைத் தேடித் தருமாறு கேட்டால், ஏ.ஐ. ஏஜெண்ட்கள் இணையதளங்களில் பொருட்களைத் தேடி, விலை மற்றும் விவரங்களை ஒப்பிட்டு வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.

பணம் செலுத்துவதற்கு முன்பாக, வாங்கும் பொருள், அதன் விலை, விற்பனையாளர் மற்றும் எந்த வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்ற விவரங்கள் பயனர்களுக்குக் காட்டப்படும். அதனைச் சரிபார்த்த பிறகு, கைரேகை அல்லது முக அடையாளம் போன்ற பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தி பயனர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே பணப் பரிவர்த்தனை நடைபெறும்.இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்காக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் , மாஸ்டர்கார்டு , விசா உள்ளிட்ட சர்வதேச கட்டண நிறுவனங்களுடன் ஓபன் ஏ.ஐ. இணைந்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் அறிமுகம்

முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட சாட்ஜிபிடி புரோ சந்தாதாரர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியான அமெரிக்க வங்கி அட்டைகளை மட்டுமே தற்போது இணைக்க முடியும். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த வசதி எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT