ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம், தனது வருடாந்திர செயற்கை நுண்ணறிவு மாநாடான Dev Day நிகழ்வில் Dots என்கிற பெயரிலான தனது புதிய ஏஐ ஏஜெண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பது ஓபன் ஏஐ. சாம் ஆல்ட்மேன் தலைமையிலான இந்த நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலகில் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் சமீபகால நகர்வுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனித்துவமான உதவியாளர் என்கிற வகையில் டாட்ஸ் ஏஜெண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன் ஏஐ.
ஓபன் ஏஐ-யின் ஜிபிடி- 6 அஸ்ட்ரா மாடல் உதவியுடன் இயங்கும் இந்த டாட்ஸ் ஏஐ ஏஜெண்ட், ஐரோப்பா, இங்கிலாந்தை உள்ளடக்கிய யு.கே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தவிர மற்ற இடங்களில் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி ப்ரோ (Pro) மற்றும் பிஸினஸ் பிரீமியம் பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
டாட்ஸ் ஏஐ ஏஜெண்டைப் பொறுத்த வரையில், 24 மணி நேரமும் கூடவே இருக்கும் உங்களின் தனிப்பட்ட உதவியாளராகவே இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது ஓபன் ஏஐ. குறிப்பாக, உங்களின் அனைத்து விதமான பணிகளையும் ஒருங்கிணைக்க, அதை ஒரே இடத்தில் இருந்து செயல்படுத்தும் விதமாக டாட்ஸ் செயல்படும். உதாரணத்திற்கு, உங்களின் சமூக வலைதளக் கணக்குகளை இதனுடன் இணைத்து விட்டால் நேரடியாக சாட் பாக்ஸில் இருந்தே அனைத்து விதமான கணக்குகளிலும் ஒரு போஸ்டை உங்களால் போட முடியும். அதேபோல், ஸ்லாக், டீம்ஸ் போன்ற அலுவலகப் பயன்பாட்டு செயலிகளையும் இதனுடன் இணைத்துக் கொண்டு அங்குவரும் அப்டேட்டுகளை இங்கிருந்தே கண்காணித்து, அதற்கான பதில்களையும் இதன் உதவியுடனே கொடுத்துவிட முடியும்.
சாட்ஜிபிடி டெஸ்க்டாப் விண்டோவில் இருந்து புதிய டாட் கணக்கை உருவாக்கி, அங்கிருந்து உங்களின் பணிகளைத் தொடங்கலாம். தற்போதைய சூழலில் மொபைலில் இந்த வசதி இல்லை என்றும், அதேபோல், டெக்ஸ்டிங் வசதியும் இல்லை என்று ஓபன் ஏஐ அறிவித்திருக்கிறது. அத்துடன் இந்த சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓபன் ஏஐயின் இந்த டாட்ஸ் ஏஜெண்ட், மொபைல் செயலிகளுக்கென பிரத்யேகமாக இயங்கும் ஆப் ஸ்டோர் மாடலுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகவே தொழில்நுட்ப வல்லுநர்கள் பார்க்கிறார்கள்.
எல்லா செயலிகளையும் சாட்ஜிபிடியின் டாட்ஸ் பக்கத்தில் இருந்தே உங்களால் ஒருங்கிணைத்து அதற்கான பணிகளை இங்கிருந்தே செய்ய முடியும். இதனால், பயனாளர்கள் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான செயலிகளைத் தனியாகத் திறந்து அதைப் பயன்படுத்த வேண்டியதில்லை. குறைந்தபட்சம் உங்களுக்கு அதில் ஒரு கணக்கு இருந்து, அதை டாட்ஸ் ஏஐ ஏஜெண்டுடன் இணைத்துவிட்டாலே போதுமானது.
வாரத்துக்கு 120 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கும் சாட்ஜிபிடி, பயனாளர்களுக்குத் தேவையான செயலிகளைக் கண்டுபிடித்து, அதை முறையாகப் பயன்படுத்தும் முழு திறனையும் இதுவரை பயன்படுத்தவே இல்லை என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. இந்த சூழலில் டாட்ஸ் ஏஐ ஏஜெண்ட், ஆப் ஸ்டோர் மாடலுக்கு நேரடி போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது.
தற்போது பயனாளர்கள், டாட்ஸ் ஏஐ ஏஜெண்டைக் குறிப்பிடும் வகையில் dots.com என்கிற இணையதளத்தைத் தேடுகையில் அது நேரடியாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் இணையதளத்துக்கே ரீடைரக்ட் செய்கிறது. குறிப்பிட்ட இணையதள முகவரியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கும் நிலையில், புதிய ஏஜெண்டை அறிமுகம் செய்கையில் அதன் பெயரிலான இணையதளம் யாரிடம் இருக்கிறது என்பதைக் கூட பரிசோதிக்கவில்லையா என்கிற ரீதியில் நெட்டிசன்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தையும் அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனையும் விமர்சித்து வருகிறார்கள்.