ஓப்போ பைண்ட் எக்ஸ் 10 
தொழில்நுட்பம்

200 மெகாபிக்சல் கேமராதான் ஹைலைட்... புகைப்பட பிரியர்களுக்கான ஓப்போ பைண்ட் எக்ஸ்10!

நவீன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999.

ஸ்மார்ட்போன்களில் அடுத்தடுத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கி வரும் ஓப்போ நிறுவனம், சக்திவாய்ந்த பிளாக்ஷிப் மாடலான, ஓப்போ பைண்ட் எக்ஸ் 10 (OPPO Find X10) ஸ்மார்ட்போனை கடந்த மாத இறுதியில் சந்தைக்கு கொண்டு வந்தது.

ஓப்போவை பொருத்தவரை எந்த அம்சஙகளையும் குறைத்து வைப்பதில்லை. முந்தைய மாடலை விட சக்திவாய்ந்த பேட்டரியைப் பொருத்த முடியும் என்றால், அதை நிச்சயம் செய்வார்கள். டிஸ்பிளேயில் கூடுதல் பிரகாசத்தையும் அதிக புதுப்பிப்பு வீதத்தையும் கொண்டு வர முடியும் என்றால், அவற்றையும் ஆராயந்து இணைப்பார்கள். அதேபோல ஸ்மார்ட்போன் கேமராவிலும் புதிய விஷயத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், இப்போது சந்தைக்கு வந்துள்ள ஓப்போ பைண்ட் எக்ஸ் 10, வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ளன. புகைப்படப் பிரியர்களைக் கவரும் வகையில், ஹாசல்பிளாட் கேமரா தொழில்நுட்பத்துடன் இரண்டு 200 மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டுள்ளது ஓப்போ பைண்ட் எக்ஸ் 10.

சக்தி வாய்ந்த கேமரா

இதில் 200 மெகாபிக்சல் முதன்மைக் கேமராவுடன். 2.8 மடங்கு ஆப்டிக்கல் ஜூம் வசதி கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவும் இடம்பெற்றுள்ளன. இதனுடன் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும், முன்புறம் 50 மெகாபிக்சல் செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. வண்ணங்களைத் துல்லியமாகப் பதிவு செய்ய சிறப்பு வண்ண உணரியும் இடம்பெற்றுள்ளது.

6.59 அங்குல எல்.டி.பி.ஓ. அமோலெட் திரை, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வேகம், மீடியாடெக் டைமென்சிட்டி 9600எம் செயலி, 12 அல்லது 16 ஜி.பி. ரேம் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள்.

மூன்று நிறங்களில்...

8,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் 80 வாட்ஸ் கம்பி வழி மின்னேற்றம், 50 வாட்ஸ் வயர்லெஸ் மின்னேற்ற வசதிகளும் உள்ளன. ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான கலர்ஓ.எஸ். 17 இயங்குதளம், வை-பை 7. ஐ.பி.69 வரையிலான நீர் மற்றும் தூசிப் பாதுகாப்பு ஆகிய வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுக்கு இணையான கேமராக்களும், நவீன அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999. இந்தியாவில், இந்த மாடலானது கிளேசியர் புளூ (Glacier Blue), குளோ கோரல் (Glow Coral) மற்றும் மிஸ்ட் கிரே (Mist Grey) ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Pro Max மாடல்

இதேபோன்று OPPO Find X10 Pro Max மாடலும் அறிமுகமாகியுள்ளது. OPPO ஸ்மார்ட்போன் வரிசையில் 'Pro Max' என்ற பெயர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த போன் லூனா ஒயிட் (Luna White) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு நிறங்களும் 12GB ரேம் (RAM) மற்றும் 512GB சேமிப்பக வசதி கொண்ட ஒரே ஒரு கட்டமைப்பில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.1,99,999 ஆகும்.

SCROLL FOR NEXT