மத்திய அரசின் டிஜிட்டல் ஆவண சேமிப்புத் தளமான 'டிஜி லாக்கர்' சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 70 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முக்கியமான ஆவணங்களை காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், தேவைப்படும் நேரங்களில் அவற்றை எடுத்துச் செல்வதும் சிரமமாக இருந்து வந்தது. குறிப்பாக பயணங்களின்போதும், அரசு அலுவலகங்களில் நடைபெறும் சரிபார்ப்புகளின்போதும் அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதற்கு மாற்றாக, ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து, மொபைல் போன் மூலமாகவே எப்போது வேண்டுமானாலும் அணுகும் வகையில் மத்திய அரசு 'டிஜி லாக்கர்' சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் முக்கிய ஆவணங்களை ஒரே தளத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
இந்தச் சேவையில் ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் மட்டுமின்றி கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பெற முடிகிறது. சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் டிஜி லாக்கர் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றால் வழங்கப்படும் டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வ தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசு சேவைகளை எளிமைப்படுத்தவும், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், டிஜி லாக்கர் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 70 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் ஆவணங்களைப் பாதுகாப்பதிலும், தேவையான நேரத்தில் எளிதாகப் பயன்படுத்துவதிலும் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதையே இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.