ஓபன் ஏஐ (Open AI), ஆந்த்ரோபிக் (Anthropic) மற்றும் இதர ஏஐ நிறுவனங்கள் மக்களை ஏஐ-க்கு எதிராகத் திருப்பும் அளவுக்கான மிகப்பெரிய பேரழிவு ஒன்று நிகழலாம் என்று கணித்திருப்பதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க நிறுவனமான AXIOS வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த கட்டுரையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்த உலகம் மிகப்பெரிய பேரழிவு ஒன்றை எதிர்கொள்ளப் போவதாக ஏஐ நிறுவனங்களின் தலைமையில் இருப்பவர்கள் கருதுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. நிதி சேவைகளைப் பெற முடியாத அளவுக்கான ஒட்டுமொத்த துண்டிப்பு, இணைய இணைப்பு துண்டிப்பு அல்லது குடிநீர், மின்சார இணைப்பே துண்டிக்கப்படுவது போன்ற மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
ஏஐ சாட்பாட்டுகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் குறித்த தகவல்கள், சமீபகாலமாகவே மக்கள் மத்தியில் இந்தத் தொழில்நுட்பத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல, இதைத் தடுக்கத் தவறியதாக ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரி டேரியோ அமேடேய் (Dario Amodei ), ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மன் (Sam Altman) ஆகியோருக்கெதிரான எதிர்ப்புக் குரல்கள் உலகின் பல பகுதிகளில் வலுத்து வருகிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது எல்லா துறைகளிலும் நடக்கும் வழக்கமான நடைமுறைதான் என்றாலும், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் பேரழிவு என்பது தவிர்க்க முடியாதது என்று ஏஐ நிறுவனங்கள் நினைப்பதுதான் இந்த விஷயத்தைத் தனிமைப்படுத்திக் காட்டுகிறது.
இதுகுறித்த கேள்வியை ஓபன் ஏஐ தரப்பில் முன்வைத்தபோது, `ஓபன் ஏஐ-யின் கைமீறிப் போகும் நிலையில் என்னவெல்லாம் நடக்கலாம் என்பது குறித்தும், அதனை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் குழுவினர் விவாதித்தார்கள். ஆனால், இந்த சூழ்நிலை என்பது தவிர்க்க முடியாதது என்று பார்க்கக் கூடாது. அதுபோன்றதொரு சூழல் ஏற்படும் நிலையில் நாம் தயாராக இருப்பதற்காகத் தான்’ என்று மழுப்பியிருக்கிறார்கள். அதேநேரம், ஆந்த்ரோபிக் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
தென்கொரிய நிதி நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், அந்நாட்டின் இரண்டு வங்கிகளின் சைபர் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதன்மூலம் ஒரே ஒரு நபரால் எந்த அளவுக்கான தாக்குதல்களை நடத்த முடியும் என்பதும் தெளிவானது.
சீனாவைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர், சீனாவைச் சேர்ந்த டீப்சீக் (DeepSeek) உள்ளிட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடினார். அதேபோல், கிளாடைப் (Claude) பயன்படுத்தி இந்தத் தகவல்களை எங்கு விற்கலாம் என்று தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏஐ-யால் ஏற்படும் இந்தப் பேரழிவு அடுத்த 6 முதல் 12 மாதங்களில் நிகழலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.