மதுரை,
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், “அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு தயார்” என்ற தங்களது கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அது பழைய செய்தி” என்று கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில், மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா?. ஓ.பன்னீர்செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். அவரின் நாடகம் எங்களிடம் எடுபடாது.
ஊடகம் மூலம் அதிமுகவில் இணைக்க சொல்லும் நாடகம் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.