மும்பை

சந்திராப்பூரில் புலி தாக்கி விவசாயி, பெண் பலி; இந்த ஆண்டில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு

சந்திராப்பூர் மாவட்டம் பிரம்மபுரி வனப்பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி மற்றும் பெண் உயிரிழந்தனர்.

சந்திராப்பூர், 

சந்திராப்பூர் மாவட்டம் தடோபா அந்தாரி தேசிய பூங்காவில் புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று முன்தினம் இங்குள்ள பிரம்மபுரி வனப்பகுதி நாக்பிட் தாலுகா அகாபூர் கிராமத்தின் அருகே தேவ்தா ஜிவான் (வயது47) என்ற பெண் விவசாய வேலைக்காக நடந்து சென்றார். அப்போது புதர்களில் பதுங்கி இருந்த புலி ஒன்று அவரை தாக்கியது. படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெகுநேரமாக வீடு திரும்பாததால் குடும்பத்தினர், கிராமமக்கள் பல இடங்களில் தேடினர். வழியில் புலி தாக்கி பலியான பெண்ணின் உடலை கண்டுப்பிடித்து மீட்டனர். இதேபோல கடந்த 11-ந் தேதி மாலை விவசாயி ஈஸ்வர் கும்பாரே (40) என்பவர் தனது மனைவியுடன் விவசாய வேலைக்கு சென்றார். அப்போது புலி அவரை தாக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரையில் இழுத்து சென்றது. தகவல் அறிந்த வனத்தறையினர் அங்கு சென்று அவரை தேடினர். காட்டில் பிணமாக கிடந்த ஈஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சந்திராப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இது வரையில் புலிகள் தாக்கிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.