சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. ஆளும் தி.மு.க. இந்த தேர்தலில் 'மெகா' கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பலமிக்கதாகவே உள்ளது.
இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட் டது. அதாவது பா.ஜனதா 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், சிங்க தமிழர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 168 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.
இந்த 168 தொகுதிகளின் பெயரையும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. களம் காண்கிறது.
சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடுகின்றது. இதுதவிர கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு என 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் மயிலாப்பூர், ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி என அந்த கட்சி போட்டியிடும் 27 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்றொரு கூட்டணி கட்சியான பா.ம.க. 18 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அந்த கட்சிக்கு செல்வாக்குள்ள வட மாவட்ட தொகுதிகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. அதாவது சேலம் மேற்கு. தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி உள் ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தஞ்சை மாவட்டம் திருவையாறு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்பட 11 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர த.மா.கா. போட்டியிடும் 5 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன் னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் 23 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 21 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் முழுமையான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 27ம் தேதி) வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க.வின் 168 வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியான நிலையில், எஞ்சி இருக்கும் 145 இடங்களில் களம் இறங்க உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.