தேர்தல் 2026

தவெகவிற்கு 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்களா?-குஷ்பு கேள்வி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று குஷ்பு கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பு புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருடன் தமிழக பாஜக துணை தலைவர் குஷ்புவும் உடன் வந்தார். அப்போது செய்தியாளர்கள் குஷ்புவிடம் எல்லாரும் தேர்தல் பரப்புரைக்குதான் வருவார்கள் ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய நீங்கள் வந்துள்ளீர்கள் ஏன் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ராமலிங்கம் தான் இந்த முறையும் ஜெயிக்கப்போகிறார், அவருக்கு இப்பொதே நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த முறையும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெல்லும் என்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் புதுச்சேரியில் அப்படி இல்லை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ராமலிங்கம் மாநிலத்தலைவர் மட்டுமல்ல எங்களுடைய வெற்றி வேட்பாளர் மீண்டும் அவர் வெற்றி பெறுவார். மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சியமைக்கும்.

விஜய் தனித்து நிற்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தவெக தலைவர் விஜய் தனித்து நிற்பதற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய கட்சிக்கு 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் முதலில் இருக்கிறார்களா என்று ஒரு சிறிய சந்தேகம் தான் எல்லாருக்கும் இருக்கிறது. திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் பேசுவது குறித்து மற்றொரு கேள்வியை எழுப்பினர் இதற்கு என் வழியில் நான் தான் ராஜா என்று சொல்லும் உரிமை அனைவருக்கும் இருப்பது போல விஜய்க்கும் இருக்கிறது.ஆனால் இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. எங்கள் சார்பில் தமிழகத்தில் இ.பி.எஸ். முதல்-அமைச்சராக வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.