தேர்தல் 2026

சட்டசபை தேர்தல்: ராஜபாளையத்தில் மனைவியை களமிறக்கிய ஜான் பாண்டியன்

போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

இதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜான் பாண்டியனின் தமமுக கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்கட்சிக்கான வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். இதன்படி ராஜபாளையம் தொகுதியில் த.ம.மு.க நிறுவனர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்தார். பாளையங்கோட்டையில் தமமுக ஆலோசனைக் கூட்டம் ஜான்பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொது தொகுதியான ராஜபாளையத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதில் ஏற்படும் சவால்கள், வேட்பாளர் தேர்வு போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வேட்பாளர்களாக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட 3 பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை வாக்குச் சீட்டு முறையில் பதிவு செய்திருந்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் 33 இடங்களில் தாமரை சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.