சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வர உள்ளார்.
சென்னையில் கணிசமான தொகுதிகளில் களம் இறங்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. குறைந்தது 30 தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டுப் பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பியூஷ் கோயல் நாளை சென்னை வர உள்ளதால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும், அடுத்த ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.