தேர்தல் 2026

தவெகவுக்கு, காங்கிரஸ் ஆதரவு எதிரொலி: கும்பகோணம் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி

கும்பகோணம் மேயராக காங்கிரஸ் கவுன்சிலர் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.வுக்கு 38 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 3, காங்கிரசுக்கு 2 கவுன்சிலர்கள் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒருவர் கவுன்சிலர்களாக உள்ளனர். இதுதவிர 3 சுயேச்சை கவுன்சி லர்களும் உள்ளனர். தங்கள் கட்சிக்கு 38 கவுன்சிலர்கள் இருந்தாலும் தி.மு.க. தலைமை, காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவருக்கு மேயர் பதவியை வழங்கியது. அதன்படி மேயராக காங்கிரஸ் கவுன்சிலர் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.

மேயர் சரவணன் பொறுப்பேற்ற நாள் முதல் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அதிகாரிகளை தன்னிச்சையாக இயக்குவதாகவும் தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த மோதல் போக்கு 'பனிப்போர்' போல இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட் சியாக உருவெடுத்தது. ஆட்சியில் இருந்த தி.மு.க.வுக்கு 59 இடங்களே கிடைத்தன. தி.மு.க. கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 5 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை பிடித்த த.வெ.க. மற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தி.மு.க.வுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. தலைவர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப் புகளில் அங்கம் வகிக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கூட்டணி தர்மம் என்ற பெயரில் கும்பகோணம் காங்கிரஸ் மேயருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்தனர். தற்போது த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதால் மேயருக்கு எதிராக கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.