திருப்பூர்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில், தி.மு.க. போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதன்படி தி.மு.க. போட்டியிடும் 164 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 125 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் மருத்துவர்கள் 15 பேருக்கும், பொறியாளர்கள் 17 பேருக்கும், வழக்கறிஞர்கள் 29 பேருக்கும், முனைவர்கள் 7 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 18 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவிநாசி தனி தொகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் மருத்துவர் வெ.கோகிலாமணி தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அவிநாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமையலர் சமைத்த மதிய உணவை பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என பிற சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் தீண்டாமை செயலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
தற்போது அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து, அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் டாக்டர் கோகிலாமணி தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.