நெல்லை,
தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அதிகாலை முதல் அந்த வாக்குச்சாவடியில் ஒருவர் கூட வாக்கு செலுத்த வரவில்லை.
இதற்கிடையில், இளம்பெண் ஒருவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் அவரை தடுத்தி நிறுத்தி அவரை அங்கிருந்து விரட்ட முயன்றனர். இதையடுத்து வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண் தனது வாக்கை செலுத்தினார். இதன் மூலம் நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் முதல் வாக்கு பதிவானது. தொடர்ந்து போலீசார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சமரசம் செய்து வாக்களிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பில் பொதுமக்கள் ஈடுபட்ட நிலையில், அந்த வாக்குச்சாவடியில் மொத்தமாக 5 வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளன.