சென்னை,
சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் 38 வேட்பாளர்களும், பெரம்பூரில் 47 வேட்பாளர்களும், கொளத்தூரில் 35 வேட்பாளர்களும், வில்லிவாக்கத்தில் 28 வேட்பாளர்களும், திரு.வி.க. நகரில் 23 வேட்பாளர்களும், எழும்பூரில் 18 வேட்பாளர்களும், ராயபுரத்தில் 28 வேட்பாளர்களும், துறைமுகத்தில் 23 வேட்பாளர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 26 வேட்பாளர்களும், ஆயிரம் விளக்கில் 18 வேட்பாளர்களும், அண்ணாநகரில் 24 வேட்பாளர்களும், விருகம்பாக்கத்தில் 24 வேட்பாளர்களும், சைதாப்பேட்டையில் 15 வேட்பாளர்களும், தியாகராயநகரில் 26 வேட்பாளர்களும், மயிலாப்பூரில் 19 வேட்பாளர்களும், வேளச்சேரியில் 27 வேட்பாளர்களும் என மொத்தம் 419 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று (16.04.2026) தொடங்கி நடைபெறுகிறது.
இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள என்.கே. திருமலைச்சாரியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, பீமன்னா கார்டன் தெருவில் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ண புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வுகளின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.