தேர்தல் 2026

‘குழந்தைகளுக்கு கூட என்னைப் பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு பிடிக்காது...’ - ஜெயக்குமார்

தோல்வி பயத்தின் காரணமாக தி.மு.க. தொடர்ந்து மத்திய அரசை குறை கூறி வருவதாக ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், சென்னை ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் இன்று வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், தோல்வி பயத்தின் காரணமாக தி.மு.க. தொடர்ந்து மத்திய அரசை குறை கூறி வருவதாக விமர்சித்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “ராயபுரத்தில் குழந்தைகளுக்கு கூட என்னைப் பிடிக்கும். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும்தான் என்னைப் பிடிக்காது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.