சென்னை,
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேரதலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.