தேர்தல் 2026

தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் 1 லட்சத்து 536 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன், அ.தி.மு.க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட 15 பேர் களத்தில் இருந்தனர். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி மையத்தில் நடந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீநாத் அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் அவர் 1 லட்சத்து 536 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தபடியாக கீதா ஜீவன் 62 ஆயிரத்து 805 ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தார். இதன்மூலம் த.வெ.க. வேட்பாளர் 37 ஆயிரத்து 731 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 13 பேரும் தோல்வியை தழுவினர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு ஓட்டு பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் 26 ஆயிரத்து 213 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் அவர் உள்பட 13 பேர் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.