சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் நாளை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நாளை (27.03.2026 வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.