தேர்தல் 2026

மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக துரோகம் செய்த மு.க.ஸ்டாலின் - அன்புமணி

காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை சமூக அநீதியாளர்களையெல்லாம் ஒன்று திரட்டி வீழ்த்தியது மட்டுமின்றி, மகளிருக்கு அதிகாரம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டதை பட்டாசு வெடித்தும் மு.க.ஸ்டாலின் கொண்டாடியிருக்கிறார். காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிருக்கு எதிராக துரோகங்களை இழைத்ததுடன், அதை வெற்றியாகவும் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி சட்டப்ப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் வரை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனை 1987-ஆம் ஆண்டில் எழுந்தது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 1993-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரையிலான 33 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க பல்வேறு தருணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை வெற்றி பெறவே இல்லை. எண்ணற்ற தருணங்களில் இந்த முயற்சியைக் கூட்டணி வைத்து முறியடித்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான்.

சமூகநீதிக்கு எதிரான டி.என்.ஏ கொண்டவர்களின் குணமும், நடத்தையும் எந்தக் காலத்திலும் மாறாது என்பதற்கு எடுத்தக்காட்டாகத் தான் கடந்த காலங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை முறியடித்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதும் தங்களின் சமூக அநீதி சாகசத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற 5 பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சமூகநீதி படுகொலை செய்திருப்பதை ஏற்க முடியாது.

மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வாக்களிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, இதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் மூகாரி இராகம் தான் பாடி வந்தார். முதலில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விடும் என்று குற்றஞ்சாட்டினார்.

ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அனைத்து மாநிலங்களையும் போலவே தமிழ்நாட்டிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்பட்டு 59 இடங்களாக அதிகரிக்கும் என்று நானும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியளித்த நிலையில், அதையெல்லாம் ஏற்க முடியாது; இதற்கான உத்தரவாதத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது; மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 7.18%ஐ விட சற்று அதிகமாக 7.23% ஆகவும், தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆகவும் உயரும் என்றும் பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டு அரசியல் சட்டத் திருத்த முன்வரைவு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 816 ஆகவும், தமிழகத்தில் 59 ஆகவும் அதிகரித்திருந்திருக்கும். தேசிய அளவில் 273 இடங்களும், தமிழக அளவில் 20 இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டு மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தது 20 பெண்கள் மக்களவையில் வீற்றிருந்திருப்பார்கள். ஆனால், அதைக் கெடுத்தது வன்மமும், வஞ்சகமும் நிறைந்த மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் தான்.

சட்டமியற்றும் அவைகளில் பாலினச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். ஆனால், 23 நாடுகளின் மக்கள் அவைகளில் மட்டும் தான் இதுவரை பெண்களின் பிரதிநிதித்துவம் 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இந்திய மக்களவையில் மகளிர் பிரதிநிதித்துவம் இப்போது வெறும் 13.6% (74 பேர்) ஆகவே உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பைக் கெடுத்த மு.க.ஸ்டாலின் துரோகக் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார். அவரை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. இதற்கான தண்டனையை திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.