சேலம்,
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.
முன்னதாக பிரசார மேடைக்கு செல்லும் வழியில் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பேரணியாக சென்றனர். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என கேப்டன் விஜயகாந்த் கூறுவார். இன்றுதான் நான் மு.க.ஸ்டாலினுடன் முதல் முறையாக பேரணியில் நடந்து சென்றேன். அவர் தினமும் நடைபயிற்சி செல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அவருடன் நடந்து சென்றபோதுதான், அவர் அரசியலில் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காரணம் அவர் மேற்கொள்ளும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும்தான் என்பதை புரிந்துகொண்டேன்.
நாங்கள் நடந்து செல்லும்போது அந்த கூட்டத்தில் நான் மட்டும்தான் ஒரே ஒரு பெண்ணாக அங்கே இருந்தேன். மற்ற அனைவருமே ஆண்கள்தான். அவ்வாறு இருக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிமிடமும் திரும்பிப் பார்த்து எனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே இருந்தார். அப்பொழுதே நான் முடிவு செய்துவிட்டேன், மு.க.ஸ்டாலின்தான் பெண் இனத்தின் பாதுகாவலர். பெண் இனத்தை உயர்த்தப்போகும் சிறந்த தலைமகன். அவர் எனக்கு கொடுத்த மரியாதையை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் கொடுத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.