தேர்தல் 2026

பட்டியல் வெளியாகும் முன்பே தொகுதியை அறிவித்தார் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பா.ஜ.க. மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இந்த முறை நெல்​லையை விட்டு சாத்​தூரில் போட்டியிட உள்ளதாக ஆரம்​பம் முதலே செய்​தி​கள் அடிபட்டு வந்த நிலை​யில், தற்​போது அது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும் என்றும் தான் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

முன்னதாக பா.ஜ.க. போட்​டி​யிடும் தொகு​தி​கள் பட்​டியலில் நெல்லைக்​கு பதிலாக சாத்​தூர் தொகுதி இடம்​பிடித்​திருந்தது. பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் தனது தொகுதியை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாத்தூரில் ஏன் போட்டி..?

2001 சட்​டசபை தேர்​தல் முதல் தொடர்ச்​சி​யாக நெல்லை தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வரு​கி​றார் ராதாபுரம் தொகு​தி​யைச் சேர்ந்த நயி​னார் நாகேந்​திரன். 1962-க்கு பிறகு நெல்லை தொகு​தி​யில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்​தலில் ஜெயித்​த​தாக சரித்​திரம் இல்​லை. இது நயி​னாருக்​கும் அப்​படியே பொருந்தும் என்பதாலே இம்​முறை தொகுதி மாறி அவர் சாத்​தூரில் செண்டிமெண்டாக களமிறங்​கு​வ​தாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதனிடையே நெல்லையில் போட்​டி​யிடு​வீர்​களா? என்று செய்​தி​யாளர்​கள் கேட்ட போதெல்​லாம் மழுப்​பலாகவே பதில் சொல்லி வந்த நயி​னார் நாகேந்​திரன், சாத்​தூர் தொகு​தி​யில் கணிச​மாக இருக்​கும் முக்​குலத்​தோர் வாக்கு வங்​கியை குறி​வைத்​தும் அங்கு இடம்​பெயர்​வ​தாக கூறப்படுகிறது. தொகுதி மாறப் போவதை வெளிப்​படை​யாகச் சொல்​லா​விட்​டாலும் கடந்த 6 மாத கால​மாகவே சாத்​தூர் தொகு​தி​யில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.