தேர்தல் 2026

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 14 இடங்களில் போட்டி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் என்.ஆர்.காங்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனையொட்டி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. தற்போதுள்ள கூட்டணியே வரும் சட்டசபை தேர்தலிலும் தொடர்வது கடந்த மாதம் மத்திய உள்துறை அமித்ஷாவின் காரைக்கால் வருகையின்போது உறுதியானது.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உறுதியானபோதிலும், தொகுதி பங்கீடு இதுவரை நடைபெறவில்லை. இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளனரான மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று மாலை புதுச்சேரி வந்தார். அவர் முதல் கட்டமாக பாஜகவினருடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காமராஜர் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் இன்று மாலை நடந்தது. என்.ஆர் காங் தரப்பில் அதன் தலைவரான முதல்-மந்திரி ரங்கசாமி,பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன் ஆகியோரும் பாஜக தரப்பில் மத்திய மந்திரி மான்சுவிக் மாண்டவியா,பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் மற்றவர்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை. சுமார் அரைமணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்காங். 16, பாஜக 14 இடங்களில் போட்டியிடவுள்ளன. பாஜகவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றார்.

பாஜக -10, அதிமுக -3, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் கட்சிக்கு 1 தொகுதி என இறுதியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.