கேரளம் மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒரு அணி, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மற்றொரு அணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை ஒட்டி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன், பத்தனம்திட்டா மாவட்டம், கோன்னி சட்டசபை தொகுதியின் இடது முன்னணி வேட்பாளர் கே.யு. ஜனீஷை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையின் கீழ் அமர்ந்து இருந்த வாக்காளர் ஒருவர் திடீரென எழுந்து, “நான் முதல்-மந்திரியிடம் கேள்வி கேட்க வேண்டும்” என்றார்.
இதனால் கோபமடைந்த பினராயி விஜயன், “கேள்வி கேட்பதை வீட்டில் வைத்துக்கொள்” என கடுமையாக பதிலளித்தார். இதைப் பார்த்து மேடையில் இருந்த தலைவர்களும், கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.