தேர்தல் 2026

வாக்கு மையங்களில் கியூ.ஆர். குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை; தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில், இந்த முறை பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் புதிய நடைமுறைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுடெல்லி

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதன்பின்னர், கடந்த 23-ந்தேதி 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத வகையில் 84.69 சதவீதம் என்ற சாதனை அளவாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டு, அதற்கான அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. சி.சி.டி.வி. கேமரா, பலத்த போலீஸ் பாதுகாப்பு என அந்த அறைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ள சூழலில், வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் எவரும் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் புதிதாக, தேர்தல் ஆணையம் கியூ.ஆர். குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. வருங்காலத்தில் அனைத்து பொது தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநில சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இந்த நடைமுறை நீட்டிக்கப்படும்.

கடந்த ஓராண்டாக 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை, தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. அவற்றில் இதுவும் ஒன்று. இதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும்போது, 3 வித பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டியிருக்கும்.

முதல் மற்றும் 2-வது நடைமுறையின்படி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கிய புகைப்பட அடையாள அட்டைகள், முக்கிய அதிகாரிகளால் சோதனை செய்யப்படும். 3-வது நடைமுறை, மிக முக்கிய செயல்பாட்டு நடைமுறை ஆகும்.

இதில், கியூ.ஆர். குறியீடு ஸ்கேனிங்கில் பரிசோதிக்கப்பட்டு, அது நிறைவடைந்த பின்னரே, வாக்கு எண்ணும் அறைகளுக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படும். அறைக்கு வெளியே அதற்கான நடைமுறை நிகழ்வுகள் நடக்கும்.

வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் முறையான அனுமதி பெற்ற அதிகாரிகள் மட்டுமே நுழைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் இந்த விசயங்களை அங்கீகரித்து உள்ளது.

இந்த புதிய புகைப்பட அடையாள அட்டை நடைமுறையானது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள், வாக்கு எண்ணும் ஊழியர்கள், தொழில் நுட்ப அதிகாரிகள், வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகள் மற்றும் வாக்கு எண்ணும் ஏஜெண்டுகள் மற்றும் வேறு சிலரிடமும் செயல்படுத்தப்படும்.

இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட ஊடக நபர்களுக்காக வாக்கு எண்ணும் அறைகளுக்கு அருகே ஊடக மையம் ஒன்றும் அமைக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகரிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இதனால் தமிழகத்தில், இந்த முறை பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் புதிய நடைமுறைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கேற்ப, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எல்லோரும், இந்த நடைமுறையை திறம்பட அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் திறமையான உயரிய தரநிலைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவுகளை அனைத்து தேர்தல் அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.